உரச் செலவைக் குறைத்து மகசூலைக் கூட்டும் மண் பரிசோதனை!

ட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது. இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள். இதனால், கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் மண் பரிசோதனை.

ஒரு நிலத்தில் சாகுபடி செய்வதற்கு முன் அந்நிலத்தின் மண்ணைப் பரிசோதனை செய்வதன் மூலம், தேவைப்படும் உரங்களை மட்டும் இட்டு நல்ல மகசூலைப் பெறமுடியும். இதனால், உரச்செலவைக் குறைக்க முடியும். மண்ணின் இயல்புத் தன்மையையும் காக்க முடியும். மண் பரிசோதனை செய்வதற்கு ஏற்ற பருவம் கோடைக்காலமாகும்.

நிலத்தின் வரப்பு ஓரங்கள், மர நிழல் விழும் இடங்கள், குப்பை மேடுள்ள இடங்கள், பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவற்றில் மண் மாதிரிகளை எடுக்கக் கூடாது. ஒரு ஏக்கர் நிலத்தில் பரவலாக ஐந்தாறு இடங்களில் மண் மாதிரிகளை எடுக்க வேண்டும்.

மண் மாதிரிகளை எடுப்பதற்கு முன், எடுக்கும் இடங்களில் மண்ணின் மேற்பகுதியைச் செதுக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், மண்வெட்டியைக் கொண்டு, முக்கால் அடி ஆழத்திற்கு ஆங்கில எழுத்து வி வடிவில் மண்ணைத் தோண்டி அதை அப்புறப்படுத்த வேண்டும். அடுத்து, அந்தப் பள்ளத்தின் இருபுறமும் மேலிருந்து கீழாக, அரை அங்குல ஆழத்துக்கு மண்ணைச் சுரண்டி எடுக்க வேண்டும். இப்படி ஐந்தாறு இடங்களில் எடுத்த மண்ணை நெகிழிப் பை அல்லது நெகிழி வாளியில் சேகரிக்க வேண்டும்.

அப்புறம், இந்த மண்ணை நிழலான இடத்தில் போட்டு ஈரமில்லாமல் உலர்த்த வேண்டும்.  உலர்த்திய பின்னர், சிமெண்ட் தரை அல்லது தார்ப்பாயில் கொட்டிச் சமப்படுத்தி, அதை நான்கு பாகங்களாகப் பிரிக்க வேண்டும். இதில், எதிரெதிர் பாகத்தில் உள்ள மண்ணை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படித் தேவைக்கேற்ப செய்து இறுதியாக ஒரு அரைக்கிலோ மண்ணை, துணிப்பை அல்லது நெகிழிப் பையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் மண் பரிசோதனைக்கான மண்.

இந்த மண்ணோடு, ஒரு தாளில் நில உரிமையாளரின் பெயர், தந்தையாரின் பெயர், நில அளவை எண், சாகுபடிப் பரப்பு, முன்னர் சாகுபடி செய்த பயிர், இனி செய்யப் போகும் பயிர் ஆகிய விவரங்களை எழுதி இணைக்க வேண்டும். இதை, வேளாண்மை அலுவலர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தால் அவர்கள் மண் ஆய்வகத்திற்கு அனுப்பித் தேவையான உரப் பரிந்துரைகளைப் பெற்றுத் தருவார்கள். அருகில் வேளாண்மை அறிவியல் நிலையம் இருந்தால் அங்கும் அணுகலாம். பிரச்சினை இருந்தால் பாசன நீரையும் பரிசோதனை செய்யலாம்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!