பெண்களின் கர்ப்பக் காலம் 280 நாட்களாகும். அதைப் போல மாடுகளின் கர்ப்பக் காலமும் 280 நாட்கள் தான். கருவில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக, தாயின் நலனுக்காக, 5 அல்லது 7 அல்லது 9 மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது.
இப்படிப் பசு மாடுகளுக்கு வளைகாப்பு, சீர்வரிசை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், கருப்பையில் உள்ள கன்றின் வளர்ச்சி, உயிரோட்டம், பசுவின் நலன் ஆகியவற்றை, கால்நடை மருத்துவர் மூலம் சோதித்து ஆலோசனை பெறுவது, பசுவுக்கு வளைகாப்பு செய்வது போலாகும்.
மாட்டின் வயிற்றில் இருக்கும் கன்றின் வளர்ச்சி, மூன்று முதல் ஏழு மாதம் வரையில் அதிகமாக இருப்பதால், மாட்டின் உடல் எடைக்கு ஏற்ப, கூடுதலாகத் தீவனம் கொடுக்க வேண்டும்.
கருவுற்ற முதல் நான்கு மாதம் வரையில், கருப்பை, மாட்டின் இடுப்பு எலும்புக்கு அருகில் இருக்கும். ஐந்திலிருந்து ஏழு மாதம் வரையில், மாட்டின் வயிற்றுப் பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும்.
பிறகு மீண்டும் நன்கு வளர்ந்த கன்றோடு மாட்டின் இடுப்பு எலும்புப் பகுதிக்கு அருகில் வந்து விடும்.
ஐந்திலிருந்து ஏழு மாதம் வரை, கன்றானது மாட்டின் வயிற்றுப் பகுதியில் இருப்பதால், கன்றின் உயிர்ப்புத் தன்மையை ஆராய்வது கடினம். அந்தக் காலத்தில் கன்றின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டால் அது வெளியே தெரிவதில்லை.
மாடுகளைத் தாக்கும் நோய் மூலம் கருப்பையில் இருக்கும் கன்றுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
அதைத் தடுப்பதற்கு, சினை மாடுகளில் ஏதேனும் காய்ச்சல், தீவனம் உண்ணாமை, முக்குதல், படுத்துப் படுத்து எழுதல், பிறப்புறுப்பு வழியாக இரத்தம் கலந்த சளி தொடர்ந்து ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்களை உறவினர்கள் வந்து வாழ்த்தி அன்பு செலுத்துவதைப் போல, சினை மாடுகளை, அருகிலுள்ள மாடு வளர்ப்போரிடம் காட்ட வேண்டும்.
அவர்கள், தங்கள் மாடுகளுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் அறிகுறிகளை எடுத்துக் கூறி, கால்நடை மருத்துவரிடம் எப்போது சோதனை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.
ஆனால் சிலர், சினை மாட்டை மற்றவர்கள் பார்த்தால் கண்ணேறு பட்டு விடும் என்று, யாரிடமும் காட்டாமல் மறைவாகக் கட்டி வைத்திருப்பார்கள்.
இதனால், சினை மாடுகளுக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளை அவர்களும் அறிவதில்லை. மற்ற மாடு வளர்ப்போரும் அறிய முடியாமல் போய் விடும்.
எனவே, முறையான சிகிச்சையின்றி, சினைமாடு குறை மாதத்திலே வழுக்கித் தள்ளும் வாய்ப்பு ஏற்படும். சினை மாடுகளில் முதல் மூன்று மாதத்திலும், கடைசி மூன்று மாதத்திலும் கோழை அடிக்கும்.
இது, பிறப்பு உறுப்புக்கு வெளியே ஒழுகித் தொங்கும். முட்டையின் வெள்ளைத் தாது போல இருக்கும்.
முதல் மூன்று மாதத்தில் சில சினை மாடுகள் பருவத்துக்கு வருவதால், உடனே சினை ஊசியைப் போட்டுவிடக் கூடாது. ஏற்கெனவே கருவூட்டல் செய்த விவரத்தை மருத்துவரிடம் கூறி, சினைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
பெண்களுக்கு வளைகாப்பு நடத்திக் கருவைக் காப்பதைப் போல, மாட்டையும் அதன் வயிற்றிலுள்ள கன்றையும் காக்கும் விதமாய், சினைக்காப்புச் செய்ய, அதற்கு ஏற்படும் நோய் மற்றும் பிரச்சினைகளை அறிந்து, முன்னெச்சரிக்கை முறைகளைக் கையாள்வது அவசியம்.
சினை மாடுகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
கருப்பைச் சுழற்சி அல்லது முறுக்கம்: சினை மாட்டின் கருப்பை நீளவாக்கில் முறுக்கிக் கொள்வது, கருப்பை முறுக்கம் அல்லது கருப்பைச் சுழற்சியாகும். பலமுறை ஈன்ற மாடுகள் தான் இதனால் அதிகமாகப் பாதிக்கப்படும்.
நோய்க் காரணங்கள்: மாடுகள் அடிக்கடி படுத்துப் படுத்து எழுவது, திடீரெனக் கீழே விழுந்து புரளுதல் இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். கருப்பை முறுக்கம் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன.
அதாவது, சினை மாட்டின் கருப்பையில் திரவம் குறைவாக இருத்தல். சினை மாடுகளை ஒரே இடத்தில் கட்டிப் பராமரித்தல். கருப்பையின் சுவர் விறைப்பின்றி இருத்தல்.
கருப்பையின் கன்று இல்லாத மற்றொரு கொம்புப் பகுதி சிறிதாகவும், கன்றைத் தாங்கும் கொம்புப் பகுதி பெரிதாகவும் இருத்தல். சினை மாடுகளை மற்ற மாடுகள் முட்டித் தள்ளுதல்.
எதிர்பாராமல் ஏற்படும் வேகமான அசைவு. வயிற்றுவலி மற்றும் வயிறு உப்புதலால் சினை மாடுகள் உருளுதல். சினை மாடுகளை வண்டிகளில் ஏற்றிச் சென்று இறக்குதல். இந்தக் கருப்பை முறுக்கை, தகுதியான கால்நடை மருத்துவர் மூலம் எடுக்க வேண்டும்.
தடுப்பு முறைகள்: சினை மாடுகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். சினை மாடுகள் படுத்துப் படுத்து எழாமலும், கீழே விழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையின்றி வண்டிகளில் ஏற்றி இறக்குவதைத் தவிர்க்க வேண்டும். சினை மாடுகளை, மற்ற மாடுகள் முட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நஞ்சுக் கொடியில் அதிகமாக நீர்த் தேங்குதல்
நஞ்சுக் கொடியில் புண் மற்றும் ஒவ்வாமை உண்டாவதால், கருப்பையில் வளரும் கன்றின் தலையில் பிறவிக் குறைபாடு இருப்பதால், நஞ்சுக் கொடியில் இருந்து திரவநீர்ச் சீராக வெளியேறாமல் தங்கி விடுகிறது.
இதனால், சினை மாட்டின் கருப்பையில் அளவுக்கு அதிகமான திரவநீர்த் தங்கி, கன்று போடுவதில் சிரமம் ஏற்படும். மேலும், பசுவின் உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடும்.
கருச்சிதைவு நோய்
இது, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்பட்டால், கன்று இறந்து போகும்; அல்லது உயிருடன் பிறந்து பிறகு இறக்கும்; இது, குறை மாதத்தில் அல்லது முழு மாதத்தில் நடக்கும்.
மற்ற மாடுகள் முட்டுவதால், விசச் செடிகளை மேய்வதால், கருச்சிதைவு ஏற்படலாம். இது, சினைக் காலத்தின் கடைசி 2-3 மாதங்களில் நிகழும்.
நோயால் நிகழ்ந்த கருச்சிதைவை, முறையாகக் குழி தோண்டிப் புதைத்து, நாய், நரிகள் தோண்டாமல், சுண்ணாம்பை மேலே கொட்டி முட்களால் மூடிவிட வேண்டும்.
தடுப்பு முறை: கோமாரி, புருசெல்லோசிஸ் மற்றும் கேம்பைலோ பேக்டிரி யோசிஸ் நோய்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும். மற்ற நோய்கள் பரவாமல் கொட்டிலைச் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.
கன்று அரைத்தல் நோய்
நோயினால் அல்லது வேறு காரணத்தால், கன்று இறந்து அழுகி, கன்றின் உடல் உறுப்புகள், தசை மற்றும் தோல் பாகங்கள் கரைந்து உறிஞ்சப்பட்ட நிலையில், கன்றின் எலும்புகள் மட்டும் மாட்டின் கருப்பையில் தங்கி விடும்.
கன்று அரைத்தல் நோய் ஏற்பட்ட மாடுகளின் கருப்பையில் இருந்து, கீழ் வடியும். உண்ணாமல் இருத்தல், காய்ச்சல், முக்குதல் போன்ற அறிகுறிகள் தென்படும். ஆசனவாய் பரிசோதனையில், இறந்த கன்றின் எலும்புகளைக் கையால் தொட்டுப் பார்க்கலாம்.
கன்று இறந்து கருப்பையில் பதப்படுத்தப்படுதல் அல்லது பாடம் செய்யப்படுதல்
கருப்பையில் இறந்த கன்றானது, நோய்க்கிருமி தாக்காமல், சீழ்ப் பிடிக்காமல் சிதையாமல்; உடலிலுள்ள நீர்ச் சத்துகள் மற்றும் கருப்பையில் உள்ள திரவநீர் உறிஞ்சப்பட்ட நிலையில், கன்றின் உருவம் மாறாமல் பாதுகாப்பாக இருக்கும்.
சினைக்காலம் முடிந்த பின்னும் கன்று வெளியே வராமல், கருப்பையிலேயே இறப்பது, இந்நோயின் முக்கிய அறிகுறியாகும்.
தடுப்பு முறைகள்: சினை ஊசியைப் போட்ட இரண்டு மாதத்திலும், மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும், சினை மாட்டைக் கால்நடை மருத்துவரிடம் காட்டிப் பரிசோதிக்க வேண்டும்.
தீவனம் உண்ணாமை மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனே கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை யளிக்க வேண்டும்.
யோனி மற்றும் கருப்பை வாய்ப் பிதுக்கம்
சினைக் காலத்தின் கடைசிப் பகுதியில், இந்தக் கருப்பை வாய் மற்றும் யோனிப் பிதுக்கம் ஏற்படும். தீவனப் பற்றாக்குறை, வெறும் வைக்கோல் மற்றும் தவிட்டை மட்டும் தீவனமாகக் கொடுத்தல்,
கால்சியம், பாஸ்பரஸ் பற்றாக்குறை, ஈஸ்ட்ரோஐன் சுரப்பி அதிகமாகச் சுரத்தல் மற்றும் மரபுவழிக் குறைபாடால் இந்நோய் ஏற்படும்.
இதனால், ஒருசில சினை மாடுகளில் யோனி மட்டும் வெளியே பிதுங்கி வரும். ஒருசில மாடுகளில் யோனியுடன் கருப்பை வாயும் வெளியே பிதுங்கும்.
சில மாடுகளில் கீழே படுத்தால் வெளியே வரும், எழுந்து நின்றால் உள்ளே சென்று விடும். சிலவற்றில் எழுந்து நின்றாலும் பிதுங்கிய யோனி மற்றும் கருப்பை வாய் உள்ளே செல்லாது.
தடுப்பு முறை: தீவனத்தில் எல்லாச் சத்துகளும் இருக்க வேண்டும். பசுந்தீவனம், வைக்கோல், புண்ணாக்கு, தவிடு, சோளம், தாதுப்புகள் மற்றும் வைட்டமின்கள் கலந்த சத்துமிக்க கலப்புத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் தீவனம் மற்றும் நீரை நிறையக் கொடுக்காமல் 4-5 வேளையாகப் பிரித்துத் தரலாம். சினை மாட்டை அவ்வப்போது நடக்க விட வேண்டும். ஒரே இடத்தில் கட்டி வைக்கக் கூடாது.
சினைமாடு கீழே படுத்தால் மாட்டின் முன்னங் கால்களை விட, பின்னங் கால்கள் உயரமாக இருக்க வேண்டும். இதற்கு, வைக்கோல் அல்லது மணல் சாக்கைப் பின்னங் கால்களுக்குக் கீழே வைக்க வேண்டும்.
பிதுங்கிய யோனி மற்றும் கருப்பை வாயை, மண் மற்றும் சாணம் படாமல் பாதுகாக்க வேண்டும். கால்நடை மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை யளிக்க வேண்டும்.
வயிற்றைத் தாங்கும் சவ்வு கிழிதல்
சினை மாட்டில் வயிற்றின் எடை கூடுவதால், பிரி பியுபிக் டென்டான் என்னும் தசைநார் கிழிந்து, வயிறு கீழே இறங்கித் தரையைத் தொடுமளவில் தொங்கும்.
இத்தகைய மாட்டைக் கால்நடை மருத்துவரிடம் காட்டி, தகுந்த சிகிச்சை யளிக்க வேண்டும். அதற்கு முன், தொங்கும் வயிற்றை வேட்டித் துணியால் மேலே தூக்கிக் கட்டிவிட வேண்டும்.
கருப்பை கிழிதல்
சினை மாட்டை, மற்ற மாடுகள் முட்டுவதால், திடீரெனக் கீழே விழுவதால், வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவதால், சினைக் கருப்பை கிழிந்து, கன்றானது, மாட்டின் வயிற்றுப் பகுதிக்குள் விழ நேரும்.
இதனால், இரத்தப்போக்கு ஏற்பட்டு, மாட்டின் உயிருக்கே ஆபத்து நேரலாம். இதைத் தவிர்க்க, சினை மாட்டை, மற்ற மாடுகள் முட்டாமல், வாகனங்கள் மோதாமல், கவனமாகப் பராமரிக்க வேண்டும்.
படுத்தால் எழ முடியாமை
சினை மாட்டுக்குப் போதிய தீவனத்தைத் தராமல் விட்டால், இந்நோய் ஏற்படும். கன்று பெருத்து ஈன முடியாமல் போய் விடும் என்று, சினை மாட்டுக்குத் தீவனத்தைக் குறைத்துக் கொடுப்பது, இதற்கு முக்கியக் காரணம்.
மேலும், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின்கள், மாவுச்சத்து மற்றும் புரதசத்துப் பற்றாக் குறையால் இந்நோய் உண்டாகும்.
இந்த நோய் தாக்கிய மாடுகளில் சில, முன்னங் கால்களை நீட்டி ஊன்றி, பின்னங் கால்களை நீட்ட முடியாமல் மடக்கியபடி தரையில் தவழ்ந்து நடப்பதால், இது தவளை நோய் எனப்படும்.
இந்நோய் வந்த ஒருசில மாடுகள் படுத்தால் எழாது. தூக்கி விட்டால் எழுந்து நிற்கும். சில மாடுகளைத் தூக்கி நிறுத்தினாலும் நிற்காது.
சில மாடுகள் முன்னங் கால்களை மட்டும் தூக்கி எழுவதற்கு முயலும். ஆனால், பின்னங் கால்களை ஊன்றி எழ முடியாமல் விழுந்து விடும்.
தடுப்பு முறை: பசுந்தீவனம், வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, மக்காச் சோளம், பருத்தி விதை, தாதுப்புகள், வைட்டமின்கள் மற்றும் கால்சிய டானிக் கலந்த கலப்புத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.
எழ முடியாத மாடுகளை, ஆட்கள் மூலம் தூக்கி நிற்க வைக்க வேண்டும். நெடுநேரம் படுக்க விடாமல் ஒரு நாளைக்கு ஆறு முறை எழுப்பி, மரத்திலோ கயிற்றிலோ கட்டி நிற்க வைக்க வேண்டும். கால்களை நன்கு தேய்த்து உருவி விட வேண்டும்.
கால்நடை மருத்துவரிடம் காட்டித் தொடர் சிகிச்சை அளிப்பது அவசியம். சில மாடுகள் ஒரே நாள் சிகிச்சையில் எழலாம். சில மாடுகள் ஒரு வார சிகிச்சையில் எழலாம்.
பெரும்பாலான மாடுகள் எழாமல் இறக்கவும் நேரலாம். எனவே, சினை மாடுகளுக்குப் போதிய அளவில் சத்துமிக்க தீவனங்களை அளித்தால் இந்நோய் வராமல் தடுக்கலாம்.
மரு.பொ.ஜெயகாந்தன், உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் – 613 403.