முந்திரி மரம் ஒரு பல்லாண்டுப் பயிர். இதற்கு, சரியான உரத்தை, சரியான அளவில், சரியான நேரத்தில் கொடுத்தால் தான், மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.
இவ்வகையில், ஓராண்டு மரத்துக்கு, 10 கிலோ தொழுவுரம், 150 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 100 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.
இரண்டு ஆண்டு மரத்துக்கு, 20 கிலோ தொழுவுரம், 300 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட், 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.
மூன்றாண்டு மரத்துக்கு, 30 கிலோ தொழுவுரம், 450 கிராம் யூரியா, 750 கிராம் சூப்பர் பாஸ்பேட், 300 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.
நான்காண்டு மரத்துக்கு, 40 கிலோ தொழுவுரம், 600 கிராம் யூரியா, 1,000 கிராம் சூப்பர் பாஸ்பேட், 400 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.
ஐந்து மற்றும் அதைக் கடந்த மரத்துக்கு, 50 கிலோ தொழுவுரம், 1,100 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.
இந்த உரங்களை இரண்டு பாகமாகப் பிரித்து, பருவமழை பெய்யும் போது இட வேண்டும். தழைச்சத்து 1,000 கிராம் இட்டால் அதிக மகசூல் கிடைக்கும். இதை நேரடி இரசாயன உரமாக இடுவதே நல்லது.
தழைச்சத்தை யூரியாவாக, மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் அல்லது ராக்பேஸ்ட்டாக, சாம்பல் சத்தை, பொட்டாசாக இட வேண்டும்.
இலைவழித் தெளிப்பாக, நீரில் கரையும் 19: 19: 19 உரத்தை, 0.1 சதம் வீதம் எடுத்து, தெளிக்க வேண்டும். இதனால், இலைகளும், கிளைகளும் செழிப்பாக வளரும்.
பூக்கும் போது, அதாவது, டிசம்பர் ஜனவரியில், மோனோ அம்மோனியம் பாஸ்பேட்டை 1 சதம் வீதம் எடுத்து, இத்துடன் 0.1 சதம் போரான் நுண்ணுரக் கலவையைச் சேர்த்து, தெளிக்க வேண்டும்.
காய்கள் பிடிக்கும் போது, அதாவது, ஜனவரி பிப்ரவரியில், 3 சத பஞ்சகவ்யா கரைசலை, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளித்தால், காய்ப் பிடிப்பும், மகசூலும் அதிகமாகும்.
தொகுப்பு: பசுமை